இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று சொல்லும் போது, எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த தமிழ்நாடு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு துறைமுக தொகுதிக்குட்பட்ட 310 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மூன்றாண்டு படிக்கும் கல்வியை, நான்கு ஆண்டுகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தாய்மொழி, ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை போதும். ஆங்கிலம் படித்த தலைவர்கள் தான் உலகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். கூகுள் நிறுவன தலைவர் ஆங்கிலம் தெரிந்த தமிழர் தான். நமக்கு தேவைப்பட்டால் எந்த மொழியை வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம். ஆனால் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஆங்கிலம் படிக்க வேண்டும்.
முதலமைச்சர், நான் மட்டும் முதல்வன் இல்லை. நீங்களும் முதல்வர் தான் என்கிறார். ஒன்றிய அரசான பாஜக, இந்தி பேசும் மாநிலங்களில் தான் வெற்றி பெறுகிறது. மக்களை மதவாரியாக பிரித்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். தமிழ் தான் நம்மை இணைக்கிறது. தமிழ் வெற்றி பெற்றால் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றால் தமிழ் வெற்றி பெற்றதாக அர்த்தம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா நினைவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கால்பந்து வீரர்கள் கலந்து கொள்ளும் கால்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு 13 நிகழ்ச்சிகள் என்று ஆரம்பித்தோம். இப்போது 20 நிகழ்ச்சியாக நடக்க உள்ளது.
மழை பெருவெள்ளக் காலத்தில் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்த துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இன்று பயனாளிகளாக வந்துள்ள நீங்கள், அடுத்து எடுத்து வைக்கும் படிகளில் வென்று, எதிர்காலத்தில் நீங்களும் இது போன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியாகவும் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
இறுதியாகப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இரு மொழிக் கொள்கை பற்றி பேசும்போது, தாய்மொழியாம் தமிழ் பற்றி கலைஞர் பேரன் பேசாமல் யார் பேசுவார். கிழக்கு மாவட்டத்தில் பல நேரங்களில் மழையும் பெய்யும், புயலும் அடிக்கும், பலமான பாராட்டுக்களும் இருக்கும். என்ன இருந்தாலும் ஒரு ஆலமரம் மட்டும் அசையாமல் நிற்கும். அது வேறு யாரும் இல்லை. அண்ணன் சேகர்பாபு தான்.
திமுக என்பது கட்சி அல்ல. மக்கள் இயக்கம். பொது மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வது தான் எங்கள் வேலை. இது மக்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. சின்னதாக இளைஞர் மன்றம் தொடங்கினார் ஸ்டாலின். 7 பேர் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக தான் ஸ்டாலின் இருந்தார். இளைஞர் அணி தலைமை அலுவலகத்தை, பல இடங்களுக்குச் சுற்றித்திரிந்து நிதி திரட்டி 11 லட்சம் கொடுத்து சொந்தமாக வாங்கினார்.
கலைஞரைப் பொறுத்தவரை கடைக்கோடி தொண்டனில் இருந்து யாராக இருந்தாலும் தராசில் ஒரே மாதிரி தான் பார்ப்பார். இளைஞர் அணி செயலாளராக உதயநிதியை அமைக்க வேண்டும் என்று அனைவரும் சொன்ன போது, அவர் பிரச்சாரம் செய்யட்டும் பார்க்கலாம் என்றார் ஸ்டாலின்.
உழைப்பு, உடன்பிறப்பு, உயர்வு இது தான் உதயநிதி என்று அவர் சொல்வார். வாரிசு என்று சொன்னவர்கள் இப்போது பெருமையாக சொல்கின்றனர். மாணவர்கள் நீங்கள் தான் புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும். உதயநிதியை சந்திப்பது கடினம். ஆனால் மாணவர்களுக்கு என்றால் அனைத்து வேலையையும் விட்டுவிட்டு வந்துவிடுவார். இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று சொல்லும் போது எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த தமிழ்நாடு என்று எடுத்துக்கூறும் நிகழ்வு தான் இது” என்று பேசினார்.