எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டார்.
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூர் வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் எம்பி கெளரவ் கோகாய் தாக்கல் செய்தார். அதேபோல பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமா நாகேஸ்வர ராவும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தார்.
இன்று வழக்கம்போல நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் கேள்வி நேரம் தொடரும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஐந்தாவது நாளாக இன்றும் மக்களவை முடங்கியது. இதே போல், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மாநிலங்களவையும் முடங்கியது.
இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் தொடங்கியது. இதன் பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.







