தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘Starship SN – 10’ என்ற ராக்கெட் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறையினருக்கான ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்துவருகிறது. செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் வகையில் ஸ்பேஷிப் ராக்கெட்டுகளை தயாரித்துவருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று டெக்சாஸில் உள்ள போகா சிகாவில் இருந்து ‘Starship SN – 10’ என்ற ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் அனுப்பப்பட்டது.
ஏற்கனவே இதுபோன்ற ஸ்பேஷிப் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்து பார்த்தது. ஆனால் அந்த ராக்கெட்டுகள் இரண்டு தரையிறங்கியபோது வெடித்துச் சிதறின. இந்நிலையில் மூன்றாவது முறையாக முந்தைய குறைபாடுகளைச் சரிசெய்து ‘Starship SN – 10’ என்ற ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தி சோதனை செய்தது.

ஆளில்லாமல் அனுப்பப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக தன்னுடைய இலக்கை அடைந்தது. பின்னர் மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் தரைதளத்தை அடைந்த சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்துச் சிதறியது. இதில் ராக்கெட்டின் பாகங்கள் விண்ணில் தூக்கி எறியப்பட்டது.
இந்த ராக்கெட் வெடிவிபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘StarShip’ ராக்கெட் மூலம் நிலவுக்குச் செல்லவுள்ள ஜப்பானியத் தொழிலதிபர் மெய்சாவா தன்னுடைய எட்டு நபர்களை இலவசமாக அழைத்துச் செல்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் பேசிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்,“எங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் ராக்கெட்டுகள் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது” என தெரிவித்தார். இந்நிலையில் ‘Starship SN – 10’ ராக்கெட்டின் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ராக்கெட் வெடிப்பு குறித்து பேசிய எலான் மஸ்க், “ ‘Starship SN – 10’ ராக்கெட் சோதனை ஓட்டத்தில் எங்களுக்குத் தேவையான ஆய்வு விவரங்கள் சேகரித்து கொடுத்துள்ளது. அதுவே எங்களுக்கான வெற்றியாகும்” எனக் கூறியுள்ளார்.







