ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் வி.கே.சசிகலா?

வரும் 23ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வி.கே. சசிகலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலையான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

வரும் 23ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வி.கே. சசிகலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலையான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அப்போதே ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த பழனிசாமி தலைமையிலான அரசு பராமரிப்பு பணிகள் இருப்பதாகக் கூறி நினைவிடத்தை மூடியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் பரப்புரை உள்ளிட்ட எந்த பணியிலும் ஈடுபடாமல், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்து 10 ஆண்டுகால ஆட்சியை இழந்தது. இதனால் கட்சியை மீட்கும் பணியில் ஈடுபடப் போவதாகவும், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தின் மீண்டும் அமைக்க இருப்பதாகவும் வி.கே.சசிகலா தொண்டர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசி வருகிறார். இவர் தொலைப்பேசியில் பேசும் அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும், ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். தலைமை, அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் கூடிய விரைவில் முழுநேர தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தொண்டர்களிடம் கூறிவந்த சசிகலா, வரும் 23ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாகவும், அதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.