முக்கியச் செய்திகள் இந்தியா

சோனியாகாந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில் குடியரசு தலைவருக்கு கடிதம்!

நேற்று மும்பையில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் உயிரிழந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றமிழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சோனியாகாந்தி, மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர்களான நாங்கள், மனித உரிமை போராளியான பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கொடூர மரணத்தால் மிகுந்த மனத்துயரோடு உள்ளோம். பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி, பலமுறை முறையிட்டும், அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. மேலும் அவர் நீர் அருந்துவதற்கு ஸ்ட்ரா (Straw) வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அளவில் பலர் இதற்காக குரல் எழுப்பிய பிறகே அவருக்கு ஸ்ட்ரா வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக சிறைக் கைதிகள் இருந்த தலோஜா சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என பாதிரியார் ஸ்டேன் சுவாமி கோரிக்கை வைத்தும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் பாம்பே உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அது காலதாமதமான நடவடிக்கை என்பதால் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதனால் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, ஜாமீனில் கூட விடுவிக்காமல் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்திருந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்தியாவின் குடியரசுத் தலைவரான நீங்கள் உங்களுடைய அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் பாதிரியாரின் மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மேலும், UAPA எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பிஹிமா கோரிகோன் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, சரத் பவார், மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஹேமந்த் சோரன், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஃபரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ், டி.ராஜா மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு!

“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

Jayapriya