நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தியது.
நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட். நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
யங் இந்தியா பிரைவேட் லிட். நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் 5 நாட்கள் விசாரணை நடத்தியது.
இதனையடுத்து, சோனியா காந்தியிடம் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல்முறையாக விசாரணை நடத்தியது. 2வது நாளாக நேற்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 6 மணி நேரம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 70க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவற்றுக்கு சோனியா காந்தி மிக விரைவாக பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இன்றுடன் சோனியா காந்தியிடம் விசாரணை முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி அளித்த பதிலும், சோனியா காந்தி அளித்துள்ள பதிலும் ஒத்துப் போகின்றனவா என்பது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
முன்னதாக, விசாரணைக்காக தனது வீட்டில் இருந்து மகள் பிரியங்கா காந்தி வத்ராவுடன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சோனியா காந்தி சென்றார்.
அவரது வருகையை முன்னிட்டு, சோனியா காந்தியின் வீடு உள்ள இடத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனிடையே, அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.









