தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தை முதற்கட்டமாக தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். அப்போது, அவர் இதனை அறிவித்தார். ஏற்கனவே, பள்ளிகளில் மதிய உணவு திட்டம் இருக்கும் நிலையில், இனி காலை உணவும் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அராசணையில், முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ. 33.56 கோடி செலவில் வழங்கப்படும். அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
திங்கள் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார். செவ்வாய் – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி. புதன் – வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார். வியாழன் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார். வெள்ளி – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி வழங்கப்படும்
வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








