சொத்து தகராறில் தந்தையை குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரியம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் 60 வயதான கருப்பையா. இவருக்கு பழனியம்மாள் என்ற மகளும் தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கருப்பையாவுக்கும், அவரது மகன் தினேஷ் குமாருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்த தினேஷ், தமது தந்தையுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கம் கருப்பையாவின் தம்பி பழனிசாமி, இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட முயன்றுள்ளார்.
அப்போது, தினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால், தந்தை கருப்பையாவையும், சித்தப்பா பழனிசாமியையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். பழனிசாமிக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய தினேஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







