தமிழுக்கும், தமிழருக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே, சிலர் தமிழ் முகமூடி அணிந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு இசைவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் பங்கேற்றார்.
இதனை அடுத்து அந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முத்தமிழ் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது; இசை கலைஞர்களுக்கு விருது வழங்கியதை பெருமையாக கருதுகிறேன்
இது முத்தமிழறிஞர் கலைஞரின் 100-வது ஆண்டு விழா என்பதால், இந்த ஆண்டு முதல் முத்தமிழ் பேரவை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் ஒரு விருதை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழை காப்பாற்றுவது, தமிழ் இனத்தை காப்பாற்றுவது.
சிலர் தமிழுக்கும், தமிழருக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே, தமிழ் முகமூடி அணிந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கணக்கு போடுகிறார்கள். அவர்கள் போடுவதெல்லாம் தப்பு கணக்குதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தக்கம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு விருதுகள் வழங்கியும் சிறப்பித்தார்.
இதனை அடுத்து இந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் விருது பெற்றோர் குறித்த விபரங்களை பகிர்ந்து பாராட்டியுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“இயல் செல்வம்” விருதினை பட்டிமன்றம் புகழ் எஸ்.ராஜாவுக்கும், “இசை செல்வம்” விருதினை எஸ்.மகதி-க்கும், “ராஜரத்னா” விருதினை இஞ்சிக்குடி ஈ.பி.கணேசனுக்கும், “நாட்டிய செல்வம்” விருதினை வழுவூர் எஸ்.பழனியப்பனுக்கும், “வீணை செல்வம்” விருதினை ராஜேஷ் வைத்யாவுக்கும், “தவில் செல்வம்” விருதினை இடும்பாவனம் கே.எஸ்.கண்ணனுக்கும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார். இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.







