கர்ப்பகாலத்தில் பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொள்வது, பிறக்கும் குழந்தையின் தலையைப் பெரிதாக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் கூறுவது என்ன?? ஏன் கர்ப்பகாலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தற்போது காணலாம்…….
ஜங்க் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவானது, சூடான அல்லது குளிர்ந்த நிலையில் அடைத்து விற்கப்படும் உணவுகளாகும். இவற்றில் இனிப்புகள் மற்றும் சோடாகளும் உள்ளடங்கும். இவ்வுணவுகளில் நார்ச்சத்து அகற்றப்பட்டு சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் உப்பு போன்றவை அதிகம் சேர்க்கப்படுகின்றன.
இத்தகைய உணவுகள், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், இதய நோய், புற்றுநோய், உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்டவை, இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை கர்ப்பிணிகள் உண்பதால், குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வானது, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனால் பிரேசில் நாட்டிலுள்ள 417 கர்ப்பிணிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவு வழங்கப்பட்டு, அதை உண்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் தாக்கம் குறித்து ஆராயப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் பாதி பெண்கள் முதன்முறையாக கர்ப்பம் தரித்தவர்கள் என்றும் அவர்களின் வயது சராசரியாக 24 என்றும் தெரிவித்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்ட பெண்களின் குழந்தைகளுக்கு தலைச்சுற்றளவு மற்றும் தொடை எலும்பு வழக்கத்தைவிட சற்று பெரியதாக வளரும் வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
தாமதமாக கர்ப்பமானவர்கள் இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவினை எடுத்துக் கொள்வதால், அவர்களின் கரு வளர்ச்சி மற்றும் குழந்தையின் எலும்புக்கூடு கூறுகளில் பாதிப்பை உண்டாக்குவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு கர்ப்பிணிகளின் உணவு முறையானது மிக முக்கியம் என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பற்றி மூத்த குழந்தைகள்நல மருத்துவரான டாக்டர் அருண் குப்தா கூறுகையில், பொதுவாக மக்கள் தினமும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும், குறிப்பாக கர்ப்பிணிகளின் நல்ல உணவுப்பழக்கமே, அவர்களின் குழந்தை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்றும் ஆரோக்கியத்துக்குத் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்…..
-தருண், நியூஸ்7 தமிழ் Health







