’சினிமா துறையை சிலர் வேண்டுமென்றே கொல்கிறார்கள்…’ மோகன்லால் வேதனை

திரைப்படங்களுக்கு எதிராக, தவறான கருத்துகளை பரப்பி, வேண்டும் என்றே சினிமா துறையை சிலர் கொல்கிறார்கள் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார். மலையாள நடிகர் சங்க (அம்மா) தேர்தல் கொச்சியில் நேற்று நடந்தது. இதற்காக கடந்த…

திரைப்படங்களுக்கு எதிராக, தவறான கருத்துகளை பரப்பி, வேண்டும் என்றே சினிமா துறையை சிலர் கொல்கிறார்கள் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.

மலையாள நடிகர் சங்க (அம்மா) தேர்தல் கொச்சியில் நேற்று நடந்தது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு, இணை செயலாளர் பதவிக்கு ஜெயசூர்யா, பொருளாளர் பதவிக்கு சித்திக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வரை இப்பதவிகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 2 துணை தலைவர்கள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் துணை தலைவர்களாக மணியன் பிள்ளை ராஜு, நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் மோகன்லால் தெரிவித்தார். அப்போது அவர் நடித்த ’ மரைக்காயர்’ படம் பற்றி கேட்டபோது, இந்தப் படம் பலரால் பாராட்டப்படுகிறது என்றும் ஆனால், சிலர் வேண்டுமென்றே இந்தப் படத்தை இழிவுப்படுத்தி பேசியும் எழுதியும் வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இதை யார் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. மலையாள நடிகர் சங்கத்தால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. படத்தை பார்த்த பிறகு அது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லலாம். ஆனால் படம் வெளிவரும் முன்பே சிலர் அதைப் பற்றி தவறாக பேசினார்கள். அதை வேண்டும் என்றே செய்தார்கள். அது இந்தப் படத்துக்கு மட்டுமல்ல, பல்வேறு படங்களுக்கும் இதே நிலைதான் நடக்கிறது. இதுபோன்றவர்களால் சினிமா தொழில் அழிந்துவருகிறது’ என்றார் மோகன்லால்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.