முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், கோவிந்தம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வீடு உட்பட தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் கடந்த 15 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் 2 கோடியே 16 லட்ச ரூபாய் பணம், 1 கிலோ தங்கம் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி, என் வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் எந்த பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.








