முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

தலைமைச் செயலாளர் இறையன்பு, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய 51 இனங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கைத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகின்றன. அவற்றை விரைவுபடுத்துவது மிகவும் முக்கியம். தரமானதாகவும், நேர்த்தியாகவும் அவை கட்டப்பட்டு ஒப்படைக்கப்படவேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாவட்டத்தின் முக்கிய திட்டங்களைப் பட்டியலிட்டு அவற்றின் முன்னேற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை வாரந்தோறும் கண்காணிப்பது அவசியம். பேருந்து நிலையங்கள், பெரிய குடிநீர்த் திட்டங்கள், தடுப்பணைகள், தூர் வாரும் பணிகள் போன்றவை இத்தகையத் திட்டங்களில் அடங்கும். அடிப்படைக் கட்டமைப்புகள் விரைவாக உருவாகும்போதுதான் வாழ்க்கைத் தரம் உயரும், உழவர்களின் இடுபொருட்கள் உரிய நேரத்தில் சந்தைப்படுத்தப்படும், தொழிற்சாலைகள் பெருகும்.

உழவர்கள் குறை தீர்க்கும் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை மாவட்டத் தலைநகரிலேயே நடத்தாமல் பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் நடத்துவது அப்பகுதியைச் சார்ந்த உழவர்கள் பெருமளவிற்கு கலந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கும். இதன்மூலம் கடைக்கோடியிலிருக்கும் சிற்றூரைச் சார்ந்த உழவரும் ஆட்சியரைப் பார்த்து தங்கள் தேவைகளைக் கூற வாய்ப்பளிக்கப்படும். கூட்டங்கள் நடத்துவதால் மட்டும் குறைகள் தீர்ந்துவிடாது. நாம் அவர்கள் கோரிக்கைகளைக் குறித்து வைத்துக்கொண்டு தீர்வு காண்பது முக்கியம்.

வேளாண் கிடங்குகளுக்கும், வயல்வெளிகளுக்கும் வாரம் ஒரு முறை சென்று பார்வையிடுவது, இடுபொருட்களின் தரத்தையும் வழங்குதலையும் செம்மைபடுத்தும்.

முன்னாள் ராணுவத்தினர் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கென சிறப்பு குறை தீர்ப்பு நாட்களை நடத்தி, அவர்களுடைய பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும். அவர்கள் சார்பாக பெறப்படுகிற மனுக்கள் முக்கியத்துவம் தரப்படவேண்டும். எல்லையிலே கொட்டுகிற மழையிலும், நடுங்க வைக்கும் குளிரிலும், கொளுத்துகிற வெயிலிலும் நின்று நம்மைப் பாதுகாக்கும் படை வீரர்கள் தங்கள் இன்றை நம்முடைய நாளைக்காக தியாகம் செய்தவர்கள் என்பதை நினைவுகூர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியத்துவம் அளிக்கவேண்டியவையாக 51 இனங்களை குறிப்பிட்டு அக்கடிதத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram