கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்

பீகாரில் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.   பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்…

பீகாரில் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

 

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியது. இதையடுத்து, முதலமைச்சர் நிதிஷ்குமார் யாதவ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து கூட்டணி அமைத்தார்.

 

பின்னர் அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார். இதையடுத்து, நேற்று முன்தினம் நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். 32 வயதான தேஜஸ்வி யாதவ் கிரிக்கெட்டில் ஜொலித்து, பின்னர் அரசியலில் இறங்கி தற்போது துணை முதலமைச்சராக தன்னை நிறுத்தி கொண்டுள்ளார்.

 

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 4 சீசன்களில் தேஜஸ்வி யாதவ் விளையாடியுள்ளார். பின்னர் 2012 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ​​கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி, பீகாரின் அரசியல் சூழலின் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார். பொது நல்வாழ்வு, பள்ளிப்படிப்பு, வேலைகள், மேம்பாடு மற்றும் பல பிரச்சாரத்தின் கவர்ச்சியான சொற்றொடர்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேஜஸ்வி யாதவ் அரசியலில் சிக்ஸர்களை அடிக்க தொடங்கினார்.

மாநிலத்தில் சமீபகாலமாக எந்த அரசியல் வளர்ச்சி நடந்தாலும், அதை ‘ஆபரேஷன் தேஜஸ்வி’ என்றே சொல்லலாம் என்று அம்மாநில மூத்த அரசியல் வாதிகள் சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி இருந்து வருகிறது. இந்த நிலையில், நிதிஷ்குமார் உடன் ஆலோசனைக்கு பிறகு அவர் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தேஜஸ்வி யாதவின் அதிரடி முடிவுகளை பாஜக எண்ணி பார்த்திருக்க முடியாது என தெரிவித்த மூத்த அரசியல் வாதிகள், கிரிக்கெட் விளையாட்டை போன்று அரசியல் விளையாட்டில் அவர் சிக்ஸர்களை குவித்து வருவதாக தெரிவித்தனர்.

 

இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் நிர்வாக அனுபவம், சமூகஅனுபவம் கொண்டவர் என்றும் மாநிலங்களவை தவிர மற்ற அனைத்து அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நரேந்திர மோடி பிரதமராகும் போது, நிதிஷ் குமார் ஏன் பிரதமராக கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சு, 2024-ம் ஆண்டு பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான அடித்தளம் என கூறப்படுகிறது.

 

– இரா.நம்பிராஜன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.