எதிர்நீச்சல் போட்டு கனவை வென்ற ‘நம்ம வீட்டு பிள்ளை’

கடின உழைப்பாளி, அருமையான கலைஞன், சிறந்த மனிதன், இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை நாயகன் என பல அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடின உழைப்பு, விடா முயற்சி இவை…

கடின உழைப்பாளி, அருமையான கலைஞன், சிறந்த மனிதன், இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை நாயகன் என பல அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கடின உழைப்பு, விடா முயற்சி இவை இரண்டாலும் சின்னத் திரையில் இருந்து பெரிய திரையில் நுழைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் போட்டு தன் கனவை நனவாக்கிக்கொண்டு, அதிக ஹிட் படங்களை கொடுத்து, தயாரிப்பாளர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கும் இந்த நம்பிக்கை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்.

இவரின் இன்றைய வெற்றிகரமான திரைப்பயணம் என்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. ஒரு சிற்பி எப்படி ஒரு சிலையை செதுக்குகிறானோ அதுபோலவே, தன்னை பற்றிய விமர்சனங்கள் வரும் போதெல்லாம் அவற்றையெல்லாம் சரிசெய்து, தன்னை தானே செதுக்கிக்கொண்டு உயரப் பறந்து கொண்டிருக்கிறார். அப்படியான இவரின் தனிப்பட்ட வாழ்க்கையும், ஆரம்பகால சினிமா வாழ்க்கையும் எப்படி இருந்தது தெரியுமா? அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பகோணத்தை சேர்ந்த தாஸ் என்ற நேர்மையான காவல் அதிகாரிக்கு மகனாக 1985 பிப்ரவரி 17 அன்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தார். இவரது தந்தை தாஸ் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றிவர். தந்தையின் பணி நிமித்தமாக திருச்சி வந்த இவரது குடும்பம் அங்கையே தங்கியதால் பள்ளி படிப்பை திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் அங்கையே மேற்படிப்பை தொடர்ந்த அவர் திருச்சி ஜே.ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் வணிக மேலாண்மை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MBA) பெற்றார்.

90-களுக்கு பிறகு தமிழகத்தில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியிருந்த நேரம். அந்த கால கட்டங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஒவ்வொரு விதமான ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் சிவகார்த்திகேயனும் தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபிக்க தொலைக்காட்சி ஊடகம் தான் சரியான வழியாக இருக்கும் என்று முடிவு செய்து வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு பயணமானார். அப்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்டு முதல் ஆட்டத்திலேயே முதல் பரிசு பெற்றார். தொலைக்காட்சி துறையில் எடுத்து வைத்த முதல் படியே வெற்றிப்படியாக இருந்தாலும், அடுத்தடுத்த வெற்றிகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை.

உறக்கம், உணவு , இரவு ,பகல் ,எதுவும் பாராமல் தன்னை ஊடகத்துறையில் நிலைப்படுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லவும் தன் எதிர்கால கனவை நோக்கி ஓடத் தொடங்கினார்.அந்த ஓட்டத்தில் நிறைய அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் சந்தித்தார். இருந்தும் விடா முயற்சி வெற்றி தரும் என்ற ஒரே குறிக்கோளோடு பல்வேறு தடைகளை தகர்த்து பயணித்தவருக்கு கிடைத்த பரிசு தான் இயக்குநர் பாண்டிராஜின் மெரினா திரைப்படம். வெறும் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமே நகைச்சுவையாக தொகுத்து வழங்கி கொண்டிருந்தவருக்கு அன்று கிடைத்த இந்த வாய்ப்பு இன்று இவ்வளவு பெரிய உச்சத்தில் அவரை அமர வைக்கும் என்று சிவகார்த்திகேயனே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

காரணம் ஒரு சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளரான சிவகார்த்திகேயனை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் அன்று பலரிடத்திலும் இருந்தது. இருந்தும் முதல் படத்திலேயே ஓரளவிற்கு மக்களின் மனங்களை வென்றார். இந்த நேரத்தில் டிவி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தனுஷிற்கு நெருங்கிய நண்பராக அறிமுகமானார். அதை வைத்து மெரினா படம் வந்த அதே 2012-ம் ஆண்டில் தனுஷுடன் இணைந்து 3 படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவே, மனம் கொத்தி பறவை , கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்தார். இதில் தனுஷ்,  சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த எதிர்நீச்சல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது.

எதிர்நீச்சல் படத்தின் வெற்றி இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. காமெடி கலந்த இவரின் நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர். இளைஞர்களை தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சுட்டி குழந்தைகளும் இவரது தீவிர ரசிகர்களாக மாற தொடங்கினர். இதை நடிகர் விஜய்யே ஒரு விருது விழா மேடையில் என் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார் என்று பெருமிதமாக கூறினார்.

அந்த அளவிற்கு திரையுலகில் பல தடை கற்களை தாண்டி வெற்றி நடைபோட ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் காமெடி கதைக்களங்களில் நடிக்க ஆரம்பித்து, பின்னர் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் குடும்பம், செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன் என பல பரிமாணங்களில் மிளிர தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, மிஸ்டர் லோக்கல், டாக்டர், டான், அண்மையில் வெளியான பிரின்ஸ் வரை அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் என்பதை தாண்டி பெரிய ஹீரோக்களே வாயை பிளக்கும் அளவுக்கு வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாகவும் அமைந்தது.

தொலைக்காட்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று பெரிய பெரிய தயரிப்பாளர்களே தானாக தேடி செல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது வெகு சாதாரணம் கிடையாது. அதற்கு பின்னால் இருக்கும் அவரது கடின உழைப்பும், அவர் சந்தித்த அவமானங்களும், வலிகளும் அவருக்கு மட்டுமே தெரிந்தது.

இந்த உலகத்துக்கிட்ட ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும் என்று தான் தயாரித்த கனா படத்தில் வசனமாக வைத்திருந்தார் சிவகார்த்திகேயன் .அது அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், திரைவாழ்க்கைக்கும் பொருத்தமானதாக இருக்கும். இந்த வசனத்தை அன்று பலரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்தனர். இன்றும் ஜெயிக்க போராடும் ஒவ்வொருவருக்கும் இந்த வசனம் ஒரு பூஸ்ட்அப்பாகவே இருக்கும் .

இப்படி நடிப்பு ஒருபுறம் இருக்க தன்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராவும் பன்முக தன்மை கொண்டவராகவும் மாற்றிக் கொண்டார். சினிமாவின் தன்னால் முடிந்த உதவிகளை சத்தம் இல்லாமல் செய்து வரும் சிவகார்த்திகேயன், தான் எழுதும் பாடல்களுக்கு வரும் வருமானத்தை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து உதவி செய்து வருகிறார்.

சினிமா துறை என்றாலே தவறான கண்ணோட்டம் கொண்ட நம்மை போலவே, சிவகார்திகேயனின் அம்மாவும் முதலில் மகன் சினிமாவில் பயணிப்பதை விரும்பவில்லை. அதற்காக தனது மகனையும் யாரும் தவறாக சித்தரித்து விடக்கூடாது என்பதற்காக சினிமாவில் நுழைந்த ஆரம்ப கட்டத்திலேயே தன் சகோதரனின் மகளை திருமணம் செய்து வைத்தார். சிவகார்த்திகேயனும் அம்மாவின் விருப்பப்படியே தனது சொந்த தாய்மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார்.

இன்று வரை திரையுலகில் வேறு எந்த நடிகையுடனும் இவர் கிசுகிசுக்கப்பட்டதில்லை. தவறாக சித்தரிக்கப்பட்டதில்லை. அம்மாவின் வளர்ப்பு தப்பாகாது என்பதை நிரூபிக்கும் விதமாக சிவகார்த்திகேயனும் இன்று வரை மிகவும் கண்ணியமுடன் திரையுலகில் அனைவருடனும் பழகி பயணித்து வருகிறார். எளிய பின்னணியிலிருந்து வந்து சாதித்துக் காட்டிய சிவகார்த்திகேயன் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர்தான். மேலும் அவர் பல உச்சத்தை தொட நாமும் வாழ்த்துவோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.