சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்மாய் தூர்வாரும் போதும் வெளியே எடுக்கப்பட்ட மீன்களை மீண்டும் அதிகாரிகள் கண்மாயில் கொட்டியதால் அவை இறந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளையார்கோவிலை அடுத்த மேல மருங்கூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகளும், 3000 மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் எல்லையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய தேவைக்காக பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டுன் கீழ் கண்மாய் உள்ளது.
இந்நிலையில், கிராம மக்களே குழு அமைத்து கண்மாயை தூர்வாரிய போது, அதிகளவில் மீன்கள் இருந்ததால் சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கண்மாயில் உள்ள மீன்களை பிடித்து சுத்தம் செய்ய முயன்றனர்.
அனுமதியின்றி கண்மாயில் மீன்களை பிடிப்பதாக தாலுகா அலுவலகத்திற்கு தகவல் அளிக்கவே அங்கு வந்த அதிகாரிகள் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி கண்மாயில் இருந்து பிடித்த சுமார் 100 கிலோ அளவிலான செத்த மீன்களை மீண்டும் கண்மாயிலேயே கொட்டிவிட்டு சென்றனர்.
இதனால் செத்த மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் கண்மாயை சுற்றியுள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்களில் துர்நாற்றம் வீசுவதால் கடும் இன்னல்களை அடைந்து வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
—வேந்தன்







