மாணவரின் உயிரைப் பறித்த வாகன விபத்து: சிவகங்கை பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்!

சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? என சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி பெரியகோட்டை செயிண்ட்…

சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? என சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி பெரியகோட்டை செயிண்ட் சார்லஸ் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தில் செயிண்ட் சார்லஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சார்பில் இயக்கப்பட்ட வந்த வாகனம் மாணவர்களை வழக்கம் போல் ஏற்றி கொண்டு சென்ற போது, முலைக்குளம் பகுதிக்கு அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேம்பத்தூரை சேர்ந்த வெள்ளைச்சாமி – கற்பகம் தம்பதியின் மகனான 7-ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில், 20 மாணவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த, மாணவர் ஹரிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு! -

இதனிடையே ஹரிவேலனின் தாய் மருத்துவமனை முன்பு கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவர் ஹரிவேலனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த உயிரிழந்த மாணவரின் தாய் கற்பகம், விதிமுறை மீறி செயல்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்று கண்ணீருடன் பேட்டியளித்தார். 15 வருடம் தவமிருந்து பெற்ற செல்ல மகனை இழந்துவிட்டதாகவும் அவர் கதறி அழுதார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் உறவினர்களிடம் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாட்சியர் சுகிதா உறுதியளித்தார். ஆனால், தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் பள்ளியை சீல் வைக்க ஒப்புக்கொண்டதால், மகனின் உடலை பெற்றுக்கொள்வதாக தாய் கற்பகம் தெரிவித்தார்.

பள்ளியின் வாகனத்தை வழக்கமாக நடராஜ் என்பவர் இயக்கி வந்த நிலையில், நடராஜ் விடுமுறை என்பதால், அவரது சகோதரர் சுரேஷ் என்பவர் வாகனத்தை இயக்கியுள்ளார். மேலும், வாகனத்தில் கதவு இல்லாமல் இருந்துள்ளதும், மாணவர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், விபத்துக்குள்ளான வாகனம் மாணவர்களை ஏற்றி செல்ல முறையான அனுமதி பெறவில்லை என்று நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்தார். இதையடுத்து இன்று அவரது ஓட்டுநர் உரிமத்தையும் 3 மாத காலத்திற்கு ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி பெரியகோட்டை செயிண்ட் சார்லஸ் பள்ளி நிர்வாகத்திற்கு தபால் வழியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பள்ளிக்கு அனுப்பிய நோட்டீஸில் என்ன உள்ளது? 

1) பள்ளி வாகன விபத்தில் விதிமீறல்கள் உள்ளதால் ஏன் உங்கள் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய கூடாது?

2) பள்ளிக்கல்வித்துறை அனுமதி இல்லாமல் வாகனத்தை ஏன் பயன்படுத்தி வந்தீர்கள்?

3) ஓட்டுநரை மாற்றி பணி செய்ய கூறியது எதற்காக?

உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கேள்விகள் விளக்க நோடீஸில் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.