பிரபல பின்னணி பாடகரான கேகேவின் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் (53) கலந்துகொண்டு சுமார் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பியபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கேகே ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேகே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் அனைவரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மாரடைப்பால் பாடகர் கேகே உயிரிழந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும், இது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் கொல்கத்தா நியூ மார்க்கெட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பாடகர் கேகேவின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் உள்ளன. கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். கேகே தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், அந்த ஹோட்டலின் பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
இந்நிலையில், கேகேவின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், கேகேவின் இதயக் குழாய்களில் ஏற்கனவே அடைப்புகள் இருந்துள்ளன. குழாய்களில் ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. கேகேவின் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம். சரியான நேரத்தில் CPR சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் கேகேவை காப்பாற்றியிருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், நுரையீரலில் அதிகப்படியான திரவம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. கேகேவுக்கு கண்டிப்பாக வலிக்கான அறிகுறிகள் தெரிந்திருக்கும். அதனை வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் என்று அவர் நினைத்திருக்கலாம். மேலும், கேகே ஆன்டாசிட்ஸ் எனும் வாயுத் தொல்லைக்காக சாப்பிடும் மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளதாகக் கூறினர்.
இதுகுறித்து கேகேவின் மனைவியிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கேகே அதிக அளவு ஆன்டாசிட் மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், கை மற்றும் தோள் பட்டைகளில் அதிக வலி இருப்பதாக கேகே தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.