கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக, இரண்டாவது முறையாக பதவியேற்கும் சித்தராமையா முன் உள்ள சவால்கள் என்ன?… விரிவாக பார்க்கலாம்….
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முன்பு உள்ள சவால்கள் என்ன?
- டி.கே.சிவக்குமார் அதிருப்தி அடையாதவாறு சித்தராமையா செயல்பட வேண்டும்.
- டி.கே.சிவக்குமார் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும்.
- காங். வாக்குறுதி அளித்த 5 இலவச திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
- இலவச திட்டத்தில் சுணக்கம் காட்டினால் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும்.
கர்நாடக சட்டமன்றத்திற்கு 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா, பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எளிதாக முதலமைச்சரானார். 2018 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தலைவர் குமாரசாமி ஓராண்டு கால முதலமைச்சராக இருந்தார். அக்கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக சித்தராமையா இருந்தார். பிறகு காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஏ.எல்.ஏக்களை கபளீகரம் செய்த பாஜக ஆட்சி அமைத்தது.
2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சித்தராமையா இரண்டாவது முறை முதலமைச்சர் ஆக, மக்கள் ஆதரவும், எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கிடைத்தது, இருந்தாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவை பெறுவதற்குள் திணறி விட்டார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் பதவி தனக்கு தான் என குரல் கொடுத்தார். புது டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் நேரடியாக தலையிட்ட பின்பே, துணை முதலமைச்சராக சம்மதித்தார் டி,கே.சிவக்குமார். இனி, ஒவ்வொரு நிகழ்விலும், டி.கே.சிவக்குமார் அதிருப்தியாகாதவாறு செயல்பட்டால் தான், ஆட்சியை முதலமைச்சர் சித்தராமையா சுமுகமாக நடத்த முடியும்.
அடுத்ததாக வரும் 2024-ம் ஆண்டில் நடைபெறும் நாடாளூமன்ற தேர்தலில், காங்கிரஸ் அதிக எம்.பிக்களை பெற, சித்தராமையாவும், சிவகுமாரும் சட்டமன்ற தேர்தல்போல், நாடாளுமன்ற தேர்தலிலும் இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம்.
அத்துடன் கர்நாடக மாநில காவல்துறையில் டிஜிபியாக இருந்து, சிபிஐ இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பிரவீன் சூட் மூலம் டி.கே.சிவக்குமாருக்கு மத்திய அரசு தரவுள்ள அழுத்தமும் சவாலாகவே பார்க்கப்படுகிறது
கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சரானதைபோல், லிங்காயத்து, சிறுபான்மை,பட்டியலின முன்னாள் அமைச்சர்கள் பலர் துணை முதலமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதியாக முக்கியமாக 5 இலவச திட்டங்களை அறிவித்தது. பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், மாதம் 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டு ஒன்றிற்கு 50 முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை, எப்படி திரட்டுவார் என்ற கேள்வி எழுகிறது. இலவச திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டினால் மக்களின் அதிருப்தியை சமாளிக்க நேரிடும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த 9 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பல வகைகளில் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. நிதி ஆதாரம் மற்றும் திட்ட அனுமதிக்கு தாமதம், மறுபுறம் ஆளூநர்கள் மூலம் மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையீடு என குடைச்சல்களை கொடுக்கிறது.
இரண்டாவது முறை முதலமைச்சராகியுள்ள சித்தராமையா மேற்கண்ட சவால்களை சமாளித்தால், கர்நாடக அரசியல் தாண்டி, இந்திய அரசியல் வரலாற்றிலும் இடம் பெறுவார் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.








