ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க ஹிரோஷிமா நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஹிரோஷிமாவில் உள்ள ஷெரட்டன் ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை, அங்கு கூடியிருந்த ஜப்பான் வாழ் இந்திய மக்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். அப்போது குழந்தைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
ஹிரோஷிமாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை மாநாட்டில் பங்கேற்க அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அவர் உரையாற்றினார்.







