மதுரை அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை! தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முக்கிய மருத்துவ உபகரணங்கள் இல்லாதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கதிர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. மனுதாரர் தனது மனுவில், “அரசு ராஜாஜி மருத்துவமனையின் இதயவியல் துறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளும், நூற்றுக்கணக்கான பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகளும், சிக்கலான இதயக் கட்டமைப்பு சார்ந்த சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.”

இதயவியல் துறைக்குத் தேவையான 32 வகையான மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்யக் கோரி, அந்தத் துறையின் தலைவர் கடந்த ஜூலை மாதம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், இதய அதிர்ச்சி மற்றும் பிற சிகிச்சைகளின்போது இதயத்தின் ரத்த ஓட்டத்திற்கு இயந்திரத்தின் மூலம் ஆதரவளிக்கத் தேவையான ECMO கருவிகள் 10 தேவைப்படும் நிலையில், மருத்துவமனையில் ஒரு கருவிகூட இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். அதேபோல், இரண்டு உள் மின்தகடுகளைக் கொண்ட டிஃபிபிரிலேட்டர் கருவிகள் தேவைப்படும் நிலையில், அவையும் மருத்துவமனையில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று இதயவியல் துறைக்குத் தேவையான பல மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலை இருப்பதாகவும், அவற்றைக் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்ட போதிலும், உபகரணங்களை வாங்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய மருத்துவ உபகரணங்களையும் வசதிகளையும் வழங்குவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்ட விருப்பமான நடவடிக்கை அல்ல என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் அரசுக்கு உள்ள அரசியலமைப்புக் கடமை என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, உரிய நிவாரணம் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.