சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | வீடு அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டி கேட்டதால், பெட்ரோல் குண்டு வீசிய நபர்!

வீட்டு அருகில் கஞ்சா புகைத்ததை தட்டி கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, போதைக்கு அடிமையான பலரும் கஞ்சாவுக்கு மாறினர்.…

வீட்டு அருகில் கஞ்சா புகைத்ததை தட்டி கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, போதைக்கு அடிமையான பலரும் கஞ்சாவுக்கு மாறினர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வெளி மாநிலங்களிலும் இருந்து அதிக அளவில் கஞ்சா தமிழகத்திற்கு விற்பனைக்கு வந்தது.

டாஸ்மாக் ஒருபுறம் இளைஞர்களை சீரழித்துவரும் நிலையில்,  கஞ்சா உள்ளிட்ட போதையாலும் பள்ளி சிறுவர்கள் துவங்கி இளைஞர்கள் வரையில் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளது.  கஞ்சா புகைக்கும் இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ஆங்காங்கே குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில்,  சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசியநகர் 6- வது தெருவில் வசித்து வருபவர் சிவா என்பவரின் வீட்டிற்கு அருகில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கஞ்சா புகைத்து கொண்டு ஆபாசமாகச் சிலரை திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை சிவா கண்டித்து அனுப்பியுள்ளார்.  அதற்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார்.  பிறகு நள்ளிரவில் அதே தெருவிற்கு வந்து சிவா வீடு அருகே பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி விட்டார்.  சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்துபார்த்த போது அங்கிருந்த கோணிப்பைகள் கொளுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் பெட்ரோல் குண்டுவீசியவர் அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற மாயாண்டு என்பது தெரிய வந்தது.  இவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதையடுத்து மனோஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.