மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அடங்கிய மகா விவகாஷ் கூட்டணி அரசு நடைபெற்று வரும் நிலையில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களால் அந்த அரசு ஆட்டம் கண்டுள்ளது. மொத்தம் உள்ள 55 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 39 பேர் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்த 39 எம்.எல்.ஏக்களுடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரது ஆதரவையும் பெற்று தனி அணியாக சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் உள்பட 16 எம்.எல்.எக்களை தகதி நீக்கம் செய்வதற்கான நோட்டீயை மகாராஷ்டிர சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிறப்பித்தார். மேலும் சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்கிவிட்டு அஜய் சவுத்திரி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அனுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மும்பையில் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களின் குடும்பத்தினரும் மிரட்டப்படுவதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு விசாரணைக்கு பின்னர், ஜூலை 11ந்தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என மகாராஷ்டிர துணை சபாநாயகர் ஷிர்வாலுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள சட்டரீதியாக மகாராஷ்டிர துணை சபாநாயருக்கு உரிமை இல்லை என்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனு தொடர்பாக பதில் அளிக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் உயிர், உடைமைகள், சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேநேரம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக விதி மீறல்கள் நிகழ்ந்தால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 11ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.








