ஆப்பிரிக்காவில் பெண்ணைத் தாக்கிக் கொன்ற ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ரூம்பேக் கிழக்கு, அகுவேல் யோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அடியு சாப்பிங். இந்தப் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராம் என்ற ஆடு ஒன்று வேகமாக ஓடி வந்து அந்தப் பெண்ணின் பின்னால் தாக்கி உள்ளது. அந்த ஆடு தொடர்ந்து தாக்கியதில் நிலைகுலைந்து போனார் அடியு சாப்பிங்.
இந்த செம்மறி ஆட்டின் தலைப் பகுதி மிகவும் வலுவாக இருக்கும். இதன் தலைப் பகுதியால் முட்டுவது பெரிய கற்களைக் கொண்டு மோதுவதற்குச் சமமாகும். அடியு சாப்பிங்கை ஆடு மீண்டும் மீண்டும் மோசமாகத் தாக்கியுள்ளது. முதலில் தலையில் தாக்கிய ஆடு பின்னர் அந்தப் பெண்ணின் நெஞ்சில் தொடர்ந்து தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில், அடியு சாப்பிங்கின் நெஞ்சு எலும்புகள் மொத்தமாக முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அந்த ஆட்டை பிடித்து காவல் நிலையத்தில் கட்டி வைத்தனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், அந்த ஆட்டின் உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். அடியு சாப்பிங்கை ஆடு தாக்கிக் கொன்றதை அப்பகுதி மக்கள் உறுதி செய்தனர். ஏராளமானோர் அந்த ஆட்டின் கொடூரத்தனம் குறித்து வாக்குமூலமாக அளித்தனர்.
இதையடுத்து, அந்த ஆட்டுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சூடான் லேக் மாநில ராணுவச் சிறையில் அந்த ஆட்டை அடைக்க உத்தரவிடப்பட்டது. 3 ஆண்டுகள் அந்த ஆடு அங்கேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








