குடும்ப கட்சிகள்தான் நாட்டின் ஜனநாயகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகப் பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், குடும்ப அரசியல் கட்சிகள் எவ்வாறு ஊழல்மயமாகி உள்ளன என்பதையும், அவை எவ்வாறு ஒரு குடும்பத்திற்காகவே மட்டுமே இயங்குகின்றன என்பதையும் நாடு பார்த்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
குடும்ப கட்சிகள் தங்களின் சொந்த நலனில் மட்டுமே அக்கறை கொண்டு செயல்படுவதாக விமர்சித்த நரேந்திர மோடி, இக்கட்சிகள் ஏழைகளின் நலன்கள் குறித்து கவலை கொள்வதில்லை என குற்றம் சாட்டினார். ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே தொடர்ந்து அதிகாரத்தை பெற வேண்டும், அதைப் பயன்படுத்தி முடிந்தமட்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே குடும்ப கட்சிகளின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் வளர்ச்சியோ, மக்களின் முன்னேற்றமோ இந்த கட்சிகளுக்கு முக்கியம் அல்ல என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா எனும் கனவுகளோடு 21ம் நூற்றாண்டில் நமது நாடு பயணித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டில் புதிதாக உருவாகியுள்ள சிறு நிறுவனங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
புதிய நிறுவனங்கள் அதிகரிப்பதில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா திகழ்வதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, 100 கோடி ரூபாய்க்கும் மேலாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.









