இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டிய
ஷர்துல் தாகூருக்கு டி-20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப் படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2 வது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி
பெற்றன.
நான்காவது போட்டியில் முதன் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி பிறகு போராடி 2 வது இன்னிங்சில் மீண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய அட்டகாசமான ஆல்ரவுண்டர் ஆட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பைக்கான அணி இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறது. இதில் அவரும் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணியை, சேதன் சர்மா தலைமையிலான தேர்வு குழு இன்று தேர்வு செய்கிறது.
ஹர்த்திக் பாண்ட்யா முதுகுவலியால் அவதிக்கப்படுவதால் அவரால் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளதால், ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.








