”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, இந்த தகவலை அஜித்பவார் மறுத்தபோதும் கடந்த சில காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவி வந்தது. அக்கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜித்பவார் பக்கம் திரும்பியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்

அதேநேரத்தில் அரசியலில் இருந்து விலகவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் இந்த முடிவை அறிவித்தபோது கட்சித் தொண்டர்கள் அதனை ஏற்க மறுத்து அவரே தலைவராக தொடர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரவிருக்கும் 2024 தேர்தலை மையமாகக் கொண்ட தேசிய அரசியலில், இந்தியாவில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான பங்குவகிக்கும் மதிப்பிற்குரிய சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பாக மீண்டும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். என்.சி.பி கட்சியை அவரே வழிநடத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.