குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் 15ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடந்த 9ம் தேதி அன்றே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் அனுப்பிவைக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவாரை சந்தித்து காங்கிரஸ் தலைவரின் முடிவு குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தன்னை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பின், தேர்தலில் போட்டியிட தான் தயார் என சரத் பவார் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்துவது குறித்து நட்பு கட்சிகளுடன் தொலைபேசி மூலம் காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்ட்ர முதலமைச்சரும் சிவ சேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோரிடம் இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் பேசி ஆதரவு திரட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து சரத் பவாருக்கு ஆதரவு திரட்டும் வேலையை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.
மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த சரத் பவார், தேசிய அரசியலில் நீண்ட அனுபவம் மிக்கவர்.
தற்போது மகாராஷ்ட்ராவில், சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் சரத் பவார்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சரத் பவாருக்கு, எதிர்க்கட்சிகளின் ஆதரவு முழுமையாக கிட்டுவதில் சிரமம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. இதற்காக இரு நபர் குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டாவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அந்த இருவர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடனும், பிற கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனையை தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் பவார் அறிவிக்கப்படுவாரானால், ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜகவின் முயற்சிக்கு அது பெருத்த சவாலாக மாறும்.
சரத் பவாரை ஏற்பதா அல்லது அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்படும்.
ஒருமித்த கருத்து எட்டப்படாமல் போகுமானால், தேர்தல் உறுதியாகும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









