புராண, வரலாற்றுக்கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், தமிழ் திரைப்பட உலகை, திசை மாற்றியவர் கிருஷ்ணசாமி..வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வீறு கொண்ட வசனங்கள் இன்றளவும் மனதுக்குள் எதிரொலிக்கிறது… வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம் பெற்ற இத்தகைய அனல் பறக்கும் உரையாடலை எழுதிய சக்தி கிருஷ்ணசாமி என்கிற மறக்கமுடியாத மாமனிதரின் 110-வது பிறந்த நாள் இன்று..

தஞ்சாவூரில் பிறந்த கிருஷ்ணசாமி, சக்தி என்ற பெயரில் நாடக மன்றம் நடத்திய நிலையில், பெரும் வரவேற்பு காரணமாக நாடகம் நடைபெறும் நகரங்களுக்கு பொதுமக்கள் செல்ல சக்தி என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்கியது ரயில்வே துறை… சக்தி நாடக சபையில் நடித்து திரைக்கு வந்தவர்களில் சிவாஜிகணேசன், நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்..
சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை கம்பளத்தார் கூத்து என்ற பெயரில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வந்தது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நெல்லை அருகே உள்ள கயத்தாறை காரில் கடந்து சென்ற சிவாஜி, கட்டபொம்மனின் வரலாற்றை நாடகமாக எழுதினால் என்ன என தன்னுடன் வந்த கிருஷ்ணசாமியை கேட்க ஒரே மாதத்தில் தயாரானது கட்டபொம்மன் நாடகம்.

“எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை” என்ற வசனங்களை எழுதி தேசப்பற்றை பாமரனுக்கும் தனது அனல்மிகு உரையாடலால் தந்தவர் சக்தி கிருஷ்ணசாமி …
சேலத்தில் அரங்கேற்றிய பின், சென்னையில் நடைபெற்ற கட்டபொம்மன் நாடகத்தை கண்ட இயக்குநர் பி.ஆர். பந்துலு திரைப்படமாக தயாரித்தார். நாடெங்கும் வீரத்துடன் வெற்றி நடை போட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். சக்தி கிருஷ்ணசாமி தந்த கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது…

“பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்னாட்டு மக்கள். போரென்றால் புலிக்குணம், பொங்குமின்பக் காதலென்றால் பூமணம், புகழுக்குரிய மானமென்றால் உலகிற்கே ஒரே இனம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள். எங்களை அடக்கியாள ஆண்டவனும் எண்ணியதில்லை. விரும்பினால், அன்பைக்காட்டி நண்பர்களாய் எங்களோடு வாழ்ந்ததுண்டு. அந்த புண்ணிய பூமியிலே, நாடு பிடிக்க வந்த நீங்கள் நரி வேஷம் கட்டி வாலையாட்டி நிற்கிறீர்கள். காலம் உங்களுக்கு கருணை காட்டினும், நல்லவர்கள் உங்கள் காலை பிடித்து வாழமாட்டார்கள் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்” என்ற வரிகள் தமிழனின் பெருமை பேசும்.
காலங்கள் மாறினாலும், கொண்ட கருத்தால், நாட் டுப்பற்றை ஊட்டிய வரிகளையும் அதனை வடிவாக தந்த சக்தி கிருஷ்ணசாமி,சிவாஜி நடிக்க B.R.பந்துலு தயாரித்து, இயக்கிய கர்ணன் திரைப்படத்திற்கும் உரையாடல் எழுதியிருந்தார்.







