நியூஸ் 7 தமிழ் மற்றும் வெரண்டா ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து நடத்திய “உயரம் தொடு” சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் திருச்சி நேஷனல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி உயர்கல்வி, போட்டித் தேர்வு மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு எண்ணற்ற வழிகாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்திய “உயரம் தொடு” ஐ.ஏ.எஸ் பயிற்சி நுழைவுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் திருச்சி கருமண்டபம் சாலையில் உள்ள நேஷனல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கலந்து கொண்டார். மேலும், வெரண்டா அகாடமியின் மேலான் இயக்குநர் ஆழ்வார், நியூஸ் 7 தமிழின் மூத்த பொறுப்பு ஆசிரியர் சரவணன், மண்டல தலைமை செய்தியாளர் அருண் குமார், நேஷனல் கல்லூரி முதல்வர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர்
வெரண்டா அகாடமியின் மேலாண் இயக்குநர் ஆழ்வார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் அறிவிச்சுடரை வழங்கி சிறப்பித்தார்.
இதில் சிறப்புறையாற்றிய நியூஸ் 7 தமிழில் மூத்த பொறுப்பாசிரியர் சரவணன் நிகழ்ச்சி நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பேசும் போது, நாட்டின் பாதுகாப்பு கேடயாமாக சிவில் சர்வீஸ் அதிகாரிகள் திகழ்கின்றனர். நாட்டை இயக்குபவர்களாக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளனர். மக்களின் வாழ்க்கை மாற்றுபவர்களாக சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உள்ளனர்.
உதவி என்று சிவில் சர்வீசில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளையே மக்கள் தேடி வருகின்றனர். வேறு எந்த தொழில் உள்ளவர்களையும் மக்கள் தேடி செல்லமாட்டார்கள். நகை பணம் காணாமல் போனாது – இனி நான் வாழவே போவதில்லை என காவல் நிலையத்திற்கு மக்கள் வரும் போது அவர்களின் நகைகளை, பணத்தை நாம் மீட்டு தரும் போது அவர்களது வாழ்வு பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் நன்றி கூறும் போது எங்களுக்கு கிடைக்கும் மன நிறைவு வேறு யாறுக்கும் எந்த துறையில் உள்ளவர்களுக்கும் கிடைக்காது.
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பணி என்பது முழுமையான மன நிறைவை தரக்கூடியது. வசதி வாய்ப்புகளுடன், கார் பங்களா மற்றும் நிறைய சொத்து சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் சிவில் சர்வீஸ் தேர்வு செய்ய முடியாது. நிறைய பேர் கூறுவார்கள் நீங்கள் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆகிவிட்டால் அடுத்த தலைமுறைக்கு கூட போதுமானது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.
ஏனென்றால் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் சிவில் சர்வீசில் உள்ளது. தியாக மனப்பான்மையுடன் நேரம் காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம் சமூகத்திற்காக வெகுஜன மக்களின் மாற்றத்திற்காக இந்த சிவில் சர்வீஸ் தேர்வு செய்பவர்களே உயர்வான இடத்திற்கு வர முடியும். உண்மையில் சாதாரண மக்கள் மகிழ்வுடன் நேரத்தை செலவு செய்வது போல் கண்டிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் செலவு செய்ய முடியாது. சிவில் சர்வீஸ் பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்கள் அப்படியே மனப்பாடம் செய்து எழுதினால் கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியாது என்றார்.
பின்னர், மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள என்ன மாதிரியான யுத்திகளை கையாள வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவில், பயிற்சி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
-ம.பவித்ரா