கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஜூலை மாதத்திற்கு முன்பாக குறையாது என அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் மற்றும் வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் கூறியுள்ளார்.
கொரோனாவின் 2-வது அலை குறித்து ஷாகித் ஜமீல் கூறியதாவது, “ கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கிறதா என்று தற்போதைய சூழ்நிலையில் கூறுவது சற்று சீக்கிரமே. மேலும் இது குறித்து விஞ்ஞானிகளின் கருத்து என்னவென்றால் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதல் அலையில் எண்ணிக்கை குறைந்ததை போல் குறையாது.
கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவதைக் கண்டோம் ஆனால் இம்முறை இந்த இரண்டாம் அலையின் தொடக்கமே 96,000-97,000-ஆக இல்லாமல் ஆரம்பமே 400,000 தில் தொடங்கியது. இதனால் அதனுடைய தாக்கம் குறைய அதிகநேரம் எடுக்கும். இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
கொரோனா 2-வது அலை விரைவாக பரவுவதற்கு வசதியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிறையத் திருமண நிகழ்வுகள் ,அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடந்தன.

மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாய்ப்பு கிடைத்தபோது போதுமான மக்கள் தடுப்பூசி போடவில்லை என்றும் பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் எண்கள் உயரத் தொடங்கியபோது, எங்களுக்கு மிகக் குறைவான தடுப்பூசி மட்டுமே இருந்தது, மேலும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக இல்லை என்ற செய்தியை இன்னும் சிலர் நம்புகின்றனர்.
கொரோனா முதல் அலையால் நோய் எதிர்ப்புச் சக்தி வந்துவிட்டதால் 2-வது அலையை எதிர்கொள்ள முடியும் என்ற மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது தவறு.
தடுப்பூசிகள் பாதுகாப்பானவையே மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை.
மற்ற நாடுகளும் 2020 ஜூன் மாதத்திலேயே தங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியா அரசு அதனை செய்யவில்லை. இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த தடுப்பூசி நிறுவனம் இருந்தது, ஆனால் அவை தனியார் நிறுவனங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு பொது தடுப்பூசி நிறுவனங்களை மூடிவிட்டது என்பது மற்றொரு கதை.
எனவே நாங்கள் முற்றிலும் தனியார் துறையினரைச் சார்ந்தே இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை நினைத்ததை விட இரண்டு மடங்கு வேகமாக நகர்கிறது அதனால்தான் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் சென்று தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது.
கொரோனா 2-வது அலை போல் மேலும் பல கொரோனா தொற்றுநோயின் பல அலைகளை இந்தியா காணக்கூடும் என்று வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் எச்சரித்துள்ளார்.







