நடிகர் ஷாருக்கான் மகனை போதைப் பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக வந்த தகவலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மும்பையில் இருந்து கடந்த 3-ஆம் தேதி கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கில், கே.பி.கோசவி, பிரபாகர் செயில் உட்பட 9 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
’போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்னிடம் 9 முதல் 10 வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கினர். அதிகாரிகளும், மேலும் சிலரும் ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக் கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர் என்றும் பின்னர் அது ரூ.18 கோடியாகக் குறைக்கப்பட்டது என்றும் என்சிபி அதிகாரி சமீர் வாங்கடேவுக்கு ரூ.8 கோடி வழங்கப்பட வேண்டும் என்றும் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். சாம் டிசவுசா என்ற அதிகாரி இந்த பேரத்தைப் பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இதை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆர்யன் கான் வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தனது தரப்பு நியாயத்தை அங்குதான் பிராபகர் சைல் தெரிவிக்க வேண்டுமே தவிர, சமூக வலைதளத்ஹ்டில் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் பெயரை கெடுப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளருமான நவாப் மாலிக், இந்தி திரைப்பட துறையினரை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல்களில் சமீா் வான்கடே ஈடுபட்டிருப்பதாகவும் இந்நிலையில், பிரபாகா் சைல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக உள்ளன என்றும் அவரின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.








