பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது கபி ஹான் கபி நா திரைப்படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் “கபி ஹான் கபி நா” திரைப்படம் சினிமா பிரியர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த ஸ்வீட் திரைப்படம் இப்போதும்கூட எல்லோருக்கும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.
இயக்குநர் குந்தன் ஷா இயக்கத்தில், 1994 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாகும். இதில், நடிகர் ஷாருக்கானின் சுனில் என்ற கதாப்பாத்திரம் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தது. நடிகை தீபக் திஜோரி, நசிரூதின் ஷா, சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். மொலோடி பாடல்களுடன் முக்கோணக் காதல் கதை கொண்ட இப்படத்தின் புகைப்படம் ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் ஷாருக்கானின் ஆரம்பகால திரைப்படமான இப்படத்தின் நினைவுகளை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “அந்த காலகட்டத்தில்… அந்த வயதில்… ரா ஆன…. கட்டுப்பாடற்ற… வரையறுக்கப்படாத… இந்தியாவின் சிறந்த நடிகர்கள் மற்றும் திரைப்படக் குழுவினரால் சூழப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் நான் மிஸ் செய்யும் குழுவினர் இவர்கள். சில சமயங்களில் அந்த தருணத்தை நான் இழக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும். ஆனால், எல்லாவற்றையும் வெல்ல முடியும் என எனக்குக் கற்றுக் கொடுத்தது அந்த தருணம். உலகத்தில் எதோ ஒரு இடத்தில் சுனில் அதை செய்து கொண்டிருப்பான் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








