நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், தனக்கு ஏழு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் துணை ஆணையர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திலும் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து ஏழு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக விஜயலட்சுமி கூறியதன் காரணமாக அவருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்கு ஆஜராகும் படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.







