பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது!

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 10ஆம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு பிணை கிடையாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

இந்த சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை அடுத்து இன்று அரசிதழில் வெளியானது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தம் ஜன.25 முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.