கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!

கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து நீர்நிலைகளும் வற்றி, வறண்டு காணப்படுகின்றன.…

கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து நீர்நிலைகளும் வற்றி, வறண்டு காணப்படுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது.

மக்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது. வறட்சியால் வனவிலங்குகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

வெயிலால் வனப்பகுதிகள் அனைத்தும் வறண்டு காணப்படுவதால் அங்குள்ள யானைகள் குடிநீருக்காகவும், உணவுக்காகவும் வனத்தை விட்டு வெளியேற தொடங்கியுள்ளன. அதன்படி, தமிழக எல்லைகளுக்குட்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோயில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, குடிநீர்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியுள்ளதாவது;

வனப் பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. அங்கும் நீர்ப் பற்றாக்குறை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும் என்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் மட்டுமின்றி அனைத்து வனவிலங்கு காப்பகங்கள் மற்றும் வனங்களிலிருந்தும் யானைகள், வனவிலங்குகள் பல நீருக்காக வெளியேறி வருவது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.