அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் வழங்க தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சென்னைக்கும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தின் மெயின் டிக்கெட் கவுண்டரில் சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரம் டிக்கெட்டுகள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. பயணிகள் குறித்த நேரத்தில் பயணிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியரிடம் பயணிகள் இதுகுறித்து கேட்ட போது, ”சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் தர இயலவில்லை, மற்றொரு கவுண்டரில் டிக்கெட் தரப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். நடைமேடை ஒன்று ஏ பகுதிக்கு அப்பால் உள்ள கவுண்டருக்கு செல்வதற்குள்ளாக ரயில் சென்றுவிடும் என்பதால், ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







