தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தொடர்விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க…

தொடர்விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க
நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை ஒட்டி  ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்தனர். அதேபோல் விசு பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிந்தனர்.


இதில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை, பெரணியில்லம், இத்தாலியன் பூங்கா, கல் மரம் மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பரப்பளவை கொண்ட பச்சை பசேலென காட்சியளிக்கும் புல்வெளி மைதானத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு 60
ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும்
பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
வகையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்ஃபி மற்றும்
புகைப்படங்கள் எடுத்து விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.