அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பிரதமர் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று நலத்திட்டங்களை பெற்ற பயனாளிகளை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டெல்லியில் ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்ததற்கு, வழக்கில் சம்மந்தமில்லாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராட்டம் செய்து மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகின்றனர் என்றார். தினமும் 200 பேரை அழைத்துக்கொண்டு தினமும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சாலையை மறித்து சென்று பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
கேரளா மாநில முதல்வருக்கு தங்க கடத்தல் வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக, கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆக்ரோசமாக போராடிக்கொண்டிருக்கும்போது, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்,பக்கத்து மாநிலத்தில் உள்ள தொண்டர்கள் சார்பாக ஒரு கருத்தும் கூட கூறவில்லை எனவும் ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்தது தவறு என பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நகை கடத்தல் வழக்கில் குற்றவாளி சுரேஷ் நேரடியாக முதல்வருக்கு தொடர்புள்ளது என கூறிய பிறகும் அதைபற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்காது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், திமுகவினர் புகார் அளித்தால் அரைமணிநேரத்தில் காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இவர்கள் மத்திய அரசை குற்றம் சொல்வதற்கு முன்பு தமிழகத்தில் எப்படி உள்ளது என கண்ணாடியை பார்க்க வேண்டும் என அண்ணாமலை விமர்சனம் செய்தார். 21 பாஜகவினர் கைது செய்யபட்டுள்ளனர் எனகூறிய அவர் காவல்துறையை ஏவல் துறையாக அரசு வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அதாவது 578 நாட்களில் 10 லட்சம் பேருக்கு ஐஏஎஸ்,ஐ.பி.எஸ் முதல் கடைநிலை ஊழியர் வரை மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது என தெரிவித்த அண்ணாமலை, மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேசத்தைப்போன்று தமிழ்நாட்டில் அக்னி வீர் பணிக்கு சேர்ப்பதில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற் அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்புக்கு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அங்கீகாரம் மற்றும் வரையறை அதிகாரம் கிடையாது என்றார்.

பி.ஜி.ஆர் டேன்ஜென்ட்கோ பங்கேற்ற கூட்டத்தில் பிஜி.ஆர்க்குத்தான் தர வேண்டும் என முதலமைச்சர் டேன்ஜெட்கோவிடம் கூறிய ஆதாரத்தை பாஜக வெளிட்டுள்ளதாகவும், இதுவரை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை எனகூறியவர் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு 2006 முதல் 2022 வரை பிஜிஆர் செய்த அனைத்து ஒப்பந்தங்களையும் வெள்ளை அறிக்கையாக கொடுங்கள் என கேட்டார். போலீஸ் விஜிலன்ஸ் அவர்களிடம் இருக்கிறது எனவும் இன்னும் மூன்று வருடங்கள் திமுக தப்பிக்கலாம் எனவும் ஆவணங்கள் பேசத்தான் போகிறது என்றும் சாடினார். மின்துறை அமைச்சர் தப்பிக்க முடியாது என தெரிவித்த அண்ணாமலை, அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எனவும் பிஜிஆர் குறித்து ஆளுநர் அலுவலகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்க பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் பாஜகவுக்கு வரும் என்றும் குற்றம்சாட்டினார்.
தற்போது இந்தியாவில் 99% எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளனர் எனவும் யாருக்கெல்லாம் சிலிண்டர் வாங்க பிரச்சனையாக இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்குமே மத்திய அரசு இலவசமாக சிலிண்டர் வழங்குவதாகவும், இதற்கு எந்த விதமான பணமும் கட்ட வேண்டியது இல்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார். அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பான கேள்விக்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டது கிடையாது என்ற அவர் பாஜக சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும், தொண்டர்களை முன்னிலைப்படுத்தும் என எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..
– இரா.நம்பிராஜன்







