சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த டான் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. டாக்டரை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து வசூல் மன்னர்களான ரஜினி, விஜய், அஜித்தை போல வசூல் இளவரசனாக உருவெடுத்தார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து இப்படம் கடந்த வாரம் OTT-யில் வெளியாகி மீண்டும் சூடான விவாதத்தை கிளப்ப தொடங்கியுள்ளது. தியேட்டரில் படம் பார்த்தவர்கள் பலரும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசித்து சிரிக்கும் படியாகவும், அப்பாவுக்கும் மகனுக்குமான சென்டிமெண்ட் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் OTT தளத்தில் படம் பார்த்த பலரும் ‘where is the comedy?’ என்று கேட்டதோடு, ‘காத்துவாக்குல யூ-டியூப் பக்கம் ஒதுங்கினால்கூட ஜி.பி. முத்துவின் வீடியோக்களில் இதைவிட அதிகப்படியான நகைச்சுவைகள் இருக்குமே! இத்தனை பெரிய பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அத்தனை பெரும் நடிகர் பட்டாளங்களை வைத்துக்கொண்டு இவ்வளவுதான் இயக்குநரால் செய்யமுடிந்ததா’ என்றும் கேட்டு வருகின்றனர்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது, ‘இதுவரை நான் வொர்க் பண்ணதுலையே ஸ்பாட்ல எந்த கவுண்டரும், பஞ்சும் போட முடியாதது இந்த படத்துலதான். சிபி கிட்ட எதை சொன்னாலும் எடுத்துக்கவே மாட்டாரு.. இவ்ளோ போதும்ன்னு கண்டிப்பா சொல்லிருவாரு’ என பேசியிருந்தார்.
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி வரலாற்றிலேயே காமெடி – கவுண்டருக்கென்றே ஒரு ட்ரெண்ட் செய்து உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். அவரைப்போன்ற ஒரு அசாதாரணக் கலைஞனை கதாநாயகனாக வைத்துக்கொண்டு படத்தின் நகைச்சுவை கண்டெண்டிற்கு கூட அவரிடம் இருந்து எந்த input-ம் வாங்கமாட்டேன் என்று அடம்பிடித்து அப்படி என்ன மாபெரும் நகைச்சுவை சித்திரத்தை வடித்துவிட்டீர்கள் சிபி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் சினிமா ஆர்வலர்கள். பால சரவணன், ஆர்ஜே விஜய், காளி வெங்கட், முனீஸ்காந்த், சூரி, சிங்கம் புலி என அனைத்து நடிகர்களுமே தனித்துவம் மிக்க கலைஞர்கள். ஆனால் இப்படத்தில் சொல்லி வைத்தார்போல் அனைத்து கேரக்டர்களுமே ஒரே பாணியில் சீரியஸாக காமெடி செய்கின்றனர். யாருடைய தனித்துவமும் வெளிப்பட்ட மாதிரி தெரியவில்லை.
ஒரு இயக்குநராக படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களையும் நாமே படைக்கும் போது நம்மை அறியாமலே அனைத்திலும் ஒரே சாயல் வந்துவிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் input-களை வாங்கும் போது அந்த கதாப்பாத்திரத்திற்கு என்று ஒரு தனித்துவம் உருவாகி இயல்பாக சுவாரஸ்யமிக்க ஒன்றாக மாறிவிடும்.
உலக நாயகன் கமல்ஹாசன் கூட, ‘நகைச்சுவை ஜானர்களில் படம் எடுக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சக கலைஞர்களின் input-களை கொண்டே ஒவ்வொரு காட்சியையும் மேலும் மெறுகேற்றுவோம்’ என்று பல இடங்களில் கூறியுள்ளார். நெல்சன் திலீப் குமாரின் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களில் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனித்துவமான தன்மையில் காமெடி செய்து ஸ்கோர் செய்வார்கள். டான் திரைப்படத்தில் அப்படியான epic காமெடியாக எந்த காட்சியும் work ஆகவில்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
காமெடியை தாண்டி தந்தை மகன் செண்டிமெண்ட் காட்சிகள் தான் படத்தை காபாற்றியதாக தியேட்டரில் பார்த்த ஆடியன்ஸ்கள் சிலர் கூறிவந்தனர். இந்நிலையில் OTT-யில் பார்த்த பலர், ‘ இத பாக்கனும்னா insta-ல செண்டி அண்ணாவோட(sentina video என்று கூகுள் செய்தால் நீங்களும் கண்டுகளிக்கலாம்) வீடியோவே பாத்துட்டு போய்டுவோமே’ என்றும் கலாய்த்து வருகின்றனர்.
படத்தில் டான் சிவகார்த்திகேயனின் அப்பாவாக வரும் சமுத்திரக்கனி எம்டனின் (எம்டன் மகன்) Lite version ஆக வலம் வருகிறார். படம் முழுக்க சிவகார்த்திகேயனை போட்டு வறுத்தெடுத்து துவைத்தெடுத்து கும்முறு டப்பர ஆடிவிட்டு கிளைமேக்ஸில் ‘எல்லாமே உன் நல்லதுக்குதான் செஞ்சேன் மகனே’ என்று கூறி ஜீவசமாதி அடைந்துவிடுகிறார்.
அதுவரை தந்தையின் மீது வெறுப்போடு மன உளைச்சளில் சுற்றிக்கொண்டிருந்த ‘டான்’ அதன்பிறகான காலங்களில் இப்படியான தந்தையை புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று பாசத்தோடு மன உளைச்சளில் சுற்றிக்கொண்டிருக்க வேண்டுமாம். ஆக இவரை போன்ற அப்பாக்களுக்கு மகனாக பிறந்தால் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு வடிவில் மன உளைச்சல் confirm என்று கூறி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முருகனுக்கு சேர வேண்டிய மாம்பழத்தை விநாயகரை ஆட்டையைபோட வைத்து முருகனை ஆண்டியாக கோவனத்துடன் மலைமேல் நிறுத்துவிட்டு கிளைமேக்ஸில் ‘இதுவும் யாம் நிகழ்த்திய திருவிளையாடல்களில் ஒன்று’ என சிவபெருமான் சொல்வது போல், தந்தை பாசத்தை உலகிற்கு உணர்த்த டான் சிவகார்த்திகேயனை ஆண்டியாக்கி அழ வைத்து ஒரு அற்புதமான திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்றும் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இது போன்ற toxic parenting-ஐ எல்லாம் ஊக்கப்படுத்தி உங்களைப்போல் எங்களையும் நைனாக்களிடம் தயவுசெய்து உதை வாங்க வைக்காதீர்கள் என்றும் 2k கிட்ஸ்கள் மன்றாடி கேட்டுக்கொண்ட வண்ணம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக இந்த டான் படத்தின் அப்பாவை விட மகன்கள் விரும்பும் அப்பா என்றால் மன்சூர் அலிகான் போல் இருக்க வேண்டும் எனவும் நெட்டீசன்கள் கூறிவருகின்றனர். நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய மகனான துகளக்-ஐ வைத்து ஒரு படம் எடுத்தார். அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், ‘ உங்கள் மகனை சினிமாவுக்கு அழைத்து வர காரணம் என்ன?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ‘ வேற எதுவும் வரல, அதான் நடிக்க கூட்டியாந்துட்டேன்’ என்று ரகளையாக பதில் கூறியிருப்பார். 2019ல் வெளியான அந்த பேட்டி நேற்றிலிருந்து இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. தந்தை மகன் உறவு என்றால் சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ போலவோ, கவுதம் வாசுதேவின் வாரணம் ஆயிரம் போலவோ( உலகத்திலேயே அப்படி ஒரு அப்பா எங்கும் இல்லை என்று நீங்கள் சொல்வது எங்களுக்கும் கேட்கிறது) இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மன்சூர் அலிகான் போலவாவது இருக்க வேண்டும் எனவும் கூறிவருகின்றனர். ஆக டான் சமுத்திரகனி அப்பா போல் அல்லாமல் அப்பா டான் ஆன மன்சூர் அலிகான் போல் ஜாலியான நண்பன் போலவும் அதேநேரத்தில் நம் விருப்பத்திற்காக எதையும் செய்யும் பொறுப்பானவர் போலவும் அப்பாக்கள் இருக்க வேண்டும் எனவும் 2k கிட்ஸ்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இத்துடன் இச்செய்தி முடிவடை…
wait wait..“நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!” என்று மருத்துவர் அய்யாவும் பாமக நிறுவனருமான ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்பது போல் மருத்துவர் அய்யா கொண்டாடும் வெற்றி என சி.கா ரசிகர்கள் இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.







