போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜயின் காவலை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்த முடியாமல் அமலாக்கத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்துக்கு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 89 பேரிடம் 1 கோடியே 67 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது விசரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்காக பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜூலை 6-ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







