அமலாக்கத்துறையின் காவலில் செந்தில் பாலாஜி…

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து இன்று தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி
உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர். அவர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதுகுறித்து நியூஸ்7 தமிழில் வெளியான வீடியோவை காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.