சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி செல்வதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நேற்று இரவு 7 மணிக்கு நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்து, நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது.
தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் இணையதள பக்கத்தில் இந்த காணொலி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம பேசினார். அவர் கூறியதாவது:
நிலவிலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை சந்திரயான்-3 விண்கலத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. நிலவுக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் விண்கலம் செல்வதுதான் மிகவும் முக்கியமான கட்டம். நிலவு எந்த தொலைவில் இருக்கிறது என்பதை அளவிடுவதில்தான் இருக்கிறது. அதை சரியாக செய்துவிட்டால், அடுத்தடுத்து சரியாக நடந்துவிடும் என்றும் சோம்நாத் கூறினார்.தற்போது, சந்திரயான் விண்கலத்தை தரையிறக்குவதில் மிகவும் கவனமாக செயல்படுவோம். விண்கலத்தில் திட்டமிட்டபடி மாற்றங்கள் நடக்கின்றன. தற்போது நல்ல முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயம் இது வெற்றிபெறும் என்று நம்புகிறோம் என கூறினார்.







