அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் செப்.30-க்குள் விசாரணையை முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை முடிக்க…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் கோரிய சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலிசாரின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமானுல்லா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மொத்தம் 6 பிரிவினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் 2 பிரிவிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றும், எனவே விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக வங்கி கணக்குகள் உள்ளிட்டவை தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரும் மாநிலம் முழுவதும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களை பெறுவது கடினமான பணி. அதனால்தான் கூடுதல் கால அவகாசம் கேட்கிறோம் , மேலும் பலரின் வங்கிக் கணக்குகளையும் ஆராய வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கூடுதல் அவகாசம் வழங்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ளார். ஏற்கனவே ஒரு அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது அவர் குற்றம் செய்த நிலையில் அதில் இருந்து தப்பிப்பதற்காக கட்சி மாறி தற்போதைய அரசிலும் அமைச்சராக உள்ளார். ஏற்கனவே ஒரு கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது, ஆனால் உச்சநீதிமன்றம் வழக்கை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென்று கூறிய நிலையில், அந்த உத்தரவை கொண்டு வழக்கை இழுத்தடிக்க பார்க்கின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதம் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும், அதற்கு மேல் காலம் நீட்டிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே நேரில் வந்து சொல்லட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அரை மணி நேரத்தில் எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்கிறோம் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அரை மணி நேரத்தில் கேட்டு வாருங்கள். இல்லையென்றால் தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணை மீண்டும் தொடங்கிய போது வழக்கு விசாரணையை முடிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்க வேண்டும், மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 1 மாதம் அவகாசம் வேண்டும் எனவே மொத்தம் 3 மாதம் அவகாசம் வேண்டுமென மத்திய குற்றப்புலனாய்வு காவல் துறை தெரிவித்தது.

இதனையடுத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த காலத்திற்கு குற்றப்பத்திரிகை இறுதி விசாரணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.