2024 மக்களவை தேர்தலுக்கு முன் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பதற்றத்தை போல பல சம்பவங்கள் இங்கு நிகழ வாய்ப்பிருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீது மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறும் விதமாக பிரபல தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், பிரதமர் மோடியின் ஆட்சி எமர்ஜென்சி ஆட்சியை விட மோசமானது எனவும், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவுவதற்கும், மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்ததற்கும் பிரதமர் மோடியும், மத்திய அரசும்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதே சூழல் நாடு முழுவதும் கூட பரவலாம் என்ற அவர், மோடி ஆட்சியை தக்கவைக்க எதையும் செய்வார் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்கு முன் வெடிகுண்டு நிகழ்வுகள் நடக்கலாம். சில முக்கிய பாஜக தலைவர்கள் கொல்லப்படலாம் அல்லது ராமர் கோயில் மீது கூட தாக்குதல் நடத்தலாம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அவர், இதற்கு உதாரணமாக புல்வாமா தாக்குதலை கூறியுள்ளார். இந்த சூழலில் மக்களின் அனுதாபத்தை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் வந்தாலும், 2024 பொதுத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும், தேர்தலுக்கு பிறகு மோடியின் அடையாளம் பறிபோகும் நிலையும் கூட வரும் என சத்யபால் மாலிக் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா





