பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கர்நாடகா சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை என்பதால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் பாஜகவில் இருந்து தொடர்ந்து பலர் விலகி வருகின்றனர். பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்தார். மேலும், இந்த முறை அவரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக மேலிடம் உத்தரவிட்டதாகவும், புதியவர்களுக்கு விட்டு கொடுக்கும்படி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றியும், பாஜக தன்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. இதனால் எனது எம்எல்ஏ பதவி மற்றும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்று மாலையே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் மூலம் அவர் கர்நாடக பாஜக கட்சியில் இருந்து விலகி தனது பதவியை ராஜினாமா செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற ஜெகதீஸ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.







