பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மாணவ சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார். ஆனால், இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது எனவும், கலை அறிவியல், பொறியியல், தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.








