தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் எனவும் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர், மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








