காரைக்காலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாராயத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் மற்றும் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் காரைக்காலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கொன்னக்காவலி பகுதியில் உள்ள தனியார் சாராய கடையில் தனிப்படை போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கணக்கில் வராத அதிக அளவிலான சாராயம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 650 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர். இதனை அடுத்து கடையின் மேலாளரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்.







