சீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு

சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.  தமிழகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக…

சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார். 

தமிழகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வடகிழக்கு பருவமழையான தீவிரமடைந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

விடிய, விடிய பெய்த கனமழையின் காரணமாக சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வரலாறு காணாத கனமழையால் சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சீர்காழியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதற்காக இன்று இரவு சீழ்காழி செல்லவுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.